• Breaking News

    தமிழர் தாயகத்தில் அரசின் மோசமான செயல்! அணிதிரட்டும் ரெலோ

     இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும், அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

    ரெலோவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவிருந்த சூம் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

    வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. மாகாண சபையின் அதிகாரங்களை பறித்து, நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது.

    அது எமது மக்களிடத்திலும், மண்ணிலும் ஒரு அபாயகரமான நிலைமையை உண்டு பண்ணிக்கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் தடைபோடவில்லை என்றால் நிச்சயமாக இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

    அதனை முறியடிக்கவேண்டும் என்றால் - எங்களுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.

    குறிப்பாக மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அதற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றார்கள்.

    கஜேந்திரகுமார் தனது பதிலை அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த அணியில் அவர் தொடர்ந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

    யாரை அழைப்பது என்ற விடயம் தொடர்பாக நாம் அனுப்பிய கடித்தில் சில தவறுகள் இருப்பதை குறிப்பிடவேண்டும். எந்தக்கட்சியினை சார்ந்தவர்கள் என்ற விடயத்தினை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்படவேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம்.

    இந்த விடயம் பிசுபிசுத்துப்போயுள்ளதாக சில ஊடகங்கள் தமது கருத்துக்களை சொல்கின்றது. ஆரம்பப்புள்ளியினையே நாம் வைத்திருக்கின்றோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும். கூட்டமைப்புத் தான் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாம் செய்யவில்லை.

    அத்துடன் இந்த ஒற்றுமையானது புலம்பெயர் உறவுகளோடும் தமிழ்நாட்டு மக்களோடும் பேணக்கூடியவகையில் இருக்கவேண்டும்.

    அந்தவகையில் யாரை அழைப்பது - யாரை விடுவது என்ற ஆலோசனையை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்றையே இன்று ஏற்பாடு செய்திருந்தோம்.

    எனவே யாரும் விடுபடமாட்டார்கள். விடுபட்டவர்களையும் அழைத்துக்கொண்டு மிகவிரைவிலே முழுமையான ஒரு கூட்டத்தினை நடாத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

    இது ஒரு கட்டமைப்பாக வருவதே சாலச்சிறந்ததாக இருக்கும். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நாம் சோர்ந்து போகமாட்டோம், அதற்கு என்னவிலை கொடுக்கவேண்டுமோ, அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

    இதன்போது, அரச தரப்புடன் இணைந்து செயற்படும் வடக்கினை சேர்ந்த கட்சிகளையும் இந்த கட்டமைப்பில் உள்வாங்கி செயற்படுவீர்களா என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு,

    அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆகவே ஒரு வலுவான ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக அவர்களும் வரவேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டால் அதனை நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad