அனுமதியின்றி ஸ்ரீலங்காவிற்குள் நுழையும் சீனர்கள்! - உண்மையைப் போட்டுடைத்த பொன்செகா
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு மாற்றமும் புலனாய்வு பிரிவில் ஏற்படுத்தப்படவில்லை.
ஒரு பதவிகளில் நியமனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு வலுவடைந்துவிட்டதாகக் கூற முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரானுக்கு அப்பால் இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாதவரை நாட்டில் அடிப்படைவாத, பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படும்.
பாதாள உலகக் குழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அண்மையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் நபரொருவரை கடத்திச் சென்று சுட்டுகொலை செய்து களனி கங்கையில் வீசியவர்கள் யார் ? தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கூட பாதாள உலகக்குழுவினரைப் போலவே செயற்படுகின்றனர். அதனால் தான் பிரபாகரனை அழைத்துச் செல்வதைப் போன்று 20 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக சென்று அசேல சம்பத்தை இழுத்துச் சென்றனர்.
இவ்வாறு செயற்படும் அதிகாரிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு மாத்திரமல்ல. இலங்கைக்குள் பிரவேசித்து எமது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டவருக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தேசிய சொத்துக்களும் மீள பெறப்படும். இலங்கைக்குள் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிக இடம் பாரிய ஆபத்தாகும். இவ்வாறு இடமளிக்கப்பட்டுள்ளமை சீனர்கள் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழையும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும்- என்றார்.
கருத்துகள் இல்லை