பௌத்த தேரரை கொலை செய்ய 15 லட்சத்தை அள்ளிக் கொடுத்த மற்றொரு தேரர் - வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
களுத்துறை இங்கிரிய தீபாலோக விகாரையில் வசித்து வரும் லுணுகம்வெஹர வினீத தேரரை கொலை செய்வதற்காக 15 லட்சம் ரூபாயை வழங்கிய அந்த விகாரையின் விகாராதிபதி மற்றும் அதற்கான உதவியை பெற்றுக்கொண்ட சாரதியை தாம் கைது செய்துள்ளதாக பாணந்துறை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வினீத தேரரை கொலை செய்ய பணம் வழங்கப்பட்டுள்ளதாக கிடைத்த எழுத்துமூலமான முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இங்கிரியவத்தை பிரதேசத்தை சேர்ந்த விகாரையில் சாரதியாக பணிப்புரியும் ஒருவர் மூலமாக கொழும்பு நாராஹேன்பிட்டி 60வது தோட்டத்தில் வசித்து வரும் பெலவத்தை பொடி இந்த கொலை முயற்சிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு, இரண்டு வருடங்களாக திட்டம் வகுக்கப்பட்டு வந்துள்ளது.
கொலை முயற்சிக்கான விகாராதிபதி 15 லட்சம் ரூபாவை வழங்க இணங்கியுள்ளதுடன் சாரதி ஊடாக நான்கு சந்தர்ப்பங்களில் 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பணத்தை வழங்காத சாரதி தனது வீட்டை நவீனப்படுத்த பயன்படுத்தியுள்ளதுடன் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்துள்ளதுடன் களுத்துறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களான விகாராதிபதியும் சாரதியும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை