• Breaking News

    இந்த அரசாங்கம் ஒரு வங்குரோத்து அரசாங்கம்- சுப்பிரமணியம் சாடல்

    எமது கடற்பிராந்தியம் தொடர்ந்து மாசடைவதை கண்காணிக்கவோ அல்லது அதனைப் பரிசீலித்து ஒரு முடிவைத் எட்டுவதற்கோ முயற்சிக்காமல் அதிகாரிகள் அசமந்தப் போக்காக இருப்பதாக தெரிகிறது. எமது அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடாகவே இந்த விடயங்கள் கருதப்படுகிறது.

    தொடர்ச்சியாக எமது காணிகளைக் கையகப்படுத்திக் கொண்டு, கடல்வளத்தை வேறு நாடுகளுக்கு அல்லது நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கு அல்லது ஈடுவைப்பதற்கு. முயற்சிக்கிறது. இந்த நிலையில் எமது அரசாங்கம் ஒரு வங்குரோத்து அரசாங்கமாக செயற்படுவது எமக்கு தெட்டத் தெளிவாகத் தெரிகிறது என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வீ.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    அவரது இல்லத்தில் இன்று (2021.07.04) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

    சமீபத்தில் இலங்கை கடற்பரப்பில் எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் எங்களுடைய கடற்பிராந்தியம் தொடர்ந்தும் மாசுபடுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றதோடு கழிவுப் பொருட்களும் கரையொதுங்குகின்றன. இது தொடர்பாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வேறு அமைச்சர்களும் அவை இணையத்தளங்களில் வெளியாகும் படங்கள் எனவும் அதில் உண்மைத் தன்மை இல்லை எனவும் கூறுகின்றனர். சிலர், இது கடற்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் நிகழ்கின்றதாகவும் இரசாயனப் பதார்த்தங்களால் நிகழவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

    சூழல் மாற்றம் என்று கூறினால், எமது நாட்டிற்கு அயலில் இருக்கும் நாடான இநிதியாவின் கரையோரங்களில் இப்படியான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கவில்லை. எமது நாட்டு அமைச்சர்கள் இதனை மூடிமறைத்து எமது மீனவ சமுதாயத்தினையும் மக்களையும் ஏமாற்ற முயற்சிக்கிறது.

    இறந்து கரையொதுங்கிய உயிரினங்களது உடற்கூற்று பரிசோதனையை சரியாக செய்தால் அவை எப்படி உயிரிழந்துள்ளன என தெளிவாக தெரியும்.

    கப்பல் எரிந்த பிரச்சினை ஒருபக்கம் இருக்க, கிளிநொச்சி மாவட்டத்திலே அட்டைக் குஞ்சுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு வந்த சீனா இப்பொழுது கரையோரங்களிலே அட்டைப் பண்ணைகளைப் போட்டு மீனவர்களுடைய வாழ்வாதாரத்திலேயே கை வைத்துள்ளது.

    இந்த குஞ்சுகளை உற்பத்தி செய்யும் சீனா எங்களுடைய அரசாங்கத்திடமோ, திணைக்களத்திடமோ, நக்டா நிறுவனத்திடமோ அல்லது செயலகத்திடமோ சரியான அனுமதியைப் பெறாமல் தான்தோன்றித்தனமாக தான் இந்த வேலையை ஆரம்பித்திருப்பது ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள்ளே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை செய்வதாகத்தான் கருதப்படும்.

    இது எப்படி இருந்தாலும் எமது அரசாங்கத்தினுடைய பின்புல ஆதரவு அவர்களுக்கு மறைமுகமாக இருக்கிறதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

    இது தொடர்பாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனிடம் வினவியபோது "கடல் அட்டையினை எமது நாட்டில் உணவாக எடுப்பதில்லை. அது உற்பத்தி செய்வதற்கும் எமது மீனவர்களுக்கு தெரியாது. அதன் காரணமாக சீனா வந்து அந்த கடல் அட்டையை பிடிப்பதோடு உற்பத்தியும் செய்கிறது" எனக்கூறியுள்ளார்.

    அரியாலையிலேயே போடப்பட்ட அட்டைப் பண்ணையை தடுத்த பின்னரும் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கூறியபோதும் அவர் அதற்கு பதில்சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.

    அந்த பண்ணையின் முகாமையாளராக கடமையாற்றுபவர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த நிறுவனத்தில் கடமையாற்றுவது அந்த கட்சியின் அமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. அப்படி இருக்கும் போது அமைச்சர் இதற்கு எவ்வாறு பதில் சொல்லப்போகின்றார் என்ற கேள்வியும் எழுகின்றது.

    நாங்கள் கூறியது போல எமது நாட்டுக்குள்ளே சீன அரசாங்கம் காற்றாலை என்ற பேரில் தீவுகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. இப்பொழுது கிளிநொச்சி கவுதாரி முனையில் தன்னிச்சையாக அட்டைப் பண்ணைகளைப் போட்டு வருவாயை ஈட்டிக்கொண்டு இருக்கின்றது.

    இவை இப்படியே போய்க்கொண்டு இருந்தால் எமது நாட்டின் வளங்கள் சீனாவினால் சுரண்டப்படுவதனை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்- என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad