• Breaking News

    யாழில் கொடூரம்: நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்

    யாழ்ப்பாணம் - வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

     இன்று மதியம் இந்த கொடூர சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

    மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். 

    நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

    படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் தலைமறைவாகி உள்ளார்.  

    இருவரும் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண் மீண்டும் பெற்றோரிடமே சென்று விட்டார். அண்மைய  காலமாக அவர் பெற்றோருடனேயே வாழ்ந்து வருகிறார்.

    விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்துள்ளார். புலோலியை சேர்ந்த அந்த ஆண், கமநல சேவைகள் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவர் ஏற்கனவே சிலரை வாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று மதியம் அந்த பெண், மத்தொனியிலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளுடன் வெளியில் வந்துள்ளார். அப்போது, தனது  கணவன் அங்கு வருவதை அவதானித்து, ஏதோ விபரீதம் நடக்கப் போவதை ஊகித்து, வேகமாக சென்றுள்ளார். மதுபோதையில் வந்த  கணவன் அவரை விரட்டியுள்ளார்.

    நடு வீதியால் மனைவியை விரட்டிச் சென்று, சட்டையை எட்டிப்பிடிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். வீதியில் விழுந்த பெண்ணை வாளால் வெட்டியுள்ளார். ஒரு வெட்டு மாத்திரமே அந்த பெண்ணில் விழுந்தது. அதற்குள் அந்த பகுதியில் நின்றவர்கள் துரிதமாக செயற்பட்டு, வாள்வெட்டு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணிற்கு இடுப்பில் வாள் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதன் பின்னரும் அந்த நபர், தாக்குதல் நடந்த இடத்திற்கு வாளுடன் இரண்டு முறை வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்ற போதும், அவர் வீட்டிலிருக்கவில்லை. அவரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad