• Breaking News

    துண்டாடப்பட்ட கை- யாழ்.போதனா மருத்துவ வல்லுனர்களின் பல மணி நேரப் போராட்டம்!

     யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic Surgery) வல்லுநர் இளஞ்செழியபல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன், மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாதியர்களின் கூட்டு சேவையினால் கை துண்டாடப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஸ்ரூடியோ ஒன்றினை நடத்தி வந்த இரு தரப்பினர் இரவு தங்கியிருந்த போது பிறிதொரு 6 பேர்கொண்ட குழுவினர் நேற்றிரவு 9.40 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

    வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் வீட்டைத் தாக்கியதுடன் ஸ்ரூடியோ அமைந்திருக்கும் பகுதியை தீ மூட்டி சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்களினால் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. படுகாயமடைந்தவரின் வெட்டப்பட்ட கைக்கான குருதி ஓட்டம் தடைப்பட்டு உடலில் ஏனைய பகுதிகளில் காயங்களும் காணப்பட்டுள்ளன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad