கோட்டாபயவை படுகொலை செய்யத்திட்டம்- கைதான நபர் அம்பலப்படுத்திய பல திடுக்கிடும் தகவல்கள்!
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர், ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பல முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்ய சூழ்ச்சி செய்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டாரிலிருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த பாக்கியதுரை நகுலேஷ்வரன் என்கிற 41 வயது நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
நாடு கடத்தப்பட்டிருந்த குறித்த நபர் முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைதாகியிருந்தார். தற்சமயம் கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரரணைப் பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டுள்ள அவர், தடுப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது கைது பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தமை அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கட்டாரிலிருந்த போது அதற்கான திட்டங்களை வகுத்திருந்ததாகவும், கட்டாரில் அதற்கான நிதியுதவியும் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே கட்டார் புலனாய்வுப் பிரிவு மற்றும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அந்த நபரை கைது செய்து நாடு கடத்தியதோடு தற்போது கொழும்பில் வைத்து மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே குறித்த நபர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை