கோட்டாபயவின் பெயரைக் கேட்டாலே அஞ்சிய காலம் மலையேறி, ஜனாதிபதி செயலகத்தையே முடக்கும் நிலை!
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரைக் கேட்டால் அஞ்சிய காலம் முடிந்து தற்போது ஜனாதிபதி செயலகத்தை முடக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பாதிக்கப்படுவோர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்காக நீதி கேட்போம் என சூளுரைத்துள்ளார்.
மேலும் நாட்டில் பல களவுகள் இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் இதனை மேற்கொள்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து எங்களுடைய மீன்களை களவு எடுக்காதீர்கள் என்று தான் கூறுகின்றோம். களவு எடுக்க வேண்டாம் என கூறுவது என்பது குற்றமா என கேட்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல களவுகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.சட்டம் ஒன்று நாடாளுமன்றத்திலே நேற்று முந்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்டமூலமாகும். அதாவது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது என்பதாகும்.
புதிதாக வந்திருக்கின்ற நிதியமைச்சர் எடுத்திருக்கின்ற முதலாவது நடவடிக்கை இது. யார் கருப்பு பணத்தை கொண்டு வரப்போகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இவ்விடயத்தை சவாலுக்கு உட்படுத்த பல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். கருப்பு பணத்தினை வெள்ளயடிக்கும் பொறிமுறையும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை