• Breaking News

    நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள்! முப்படையினரும் தயார் நிலையில்..

     தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

    இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

    தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் மருத்துவ தேவை அல்லது மரண வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறானவர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

    ஆவணங்கள் சந்தேகத்துக்கிடமானவை என்று கண்காணிப்புக்களில் ஈடுபடும் பொலிஸார் கருதும் பட்சத்தில் அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதிகளையும் அலுவலக பிரதானிகள் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    இது தொடர்பில் சகல பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    ஏதேனுமொரு வழியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

    தற்போது அமுலில் உள்ளது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அல்ல. இவ்வாறான கண்காணிப்புக்களில் பொலிஸார் ஈடுபடுவது மக்களினதும் சமூகத்தினதும் நலனுக்காகவே என்பதை சகலரும் உணர வேண்டும் என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad