• Breaking News

    திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்- ஈழ அகதிகள் சிலர் வயிற்றைக் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயற்சி!

     தமிழ் நாட்டின் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றை கத்தியால் கீறியும் 15 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    திருச்சி சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளதால், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தொடர் போராட்டம் நடத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஈழ அகதிகள், விடுதலை வேண்டி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த தாம் பல உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதியான வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு மதிப்பளித்து தமது போராட்டங்களை கைவிட்டோம் என கூறியுள்ளனர்.

    எனினும் தமது நம்பிக்கை தகர்க்கப்பட்ட நிலையில் அவர்களை நம்பி இனிமேல் தமது குடும்பத்தின் இழக்க முடியாது என்ற நிலைமையில் தம்மை விடுதலை செய்யும் வரை நண்பர்களில் இருவர் 7 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தையும் ஏனையோர் இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    தமது விடுதலைக்கு ஊடகத்துறையுடன் இணைந்து இரத்த சொந்தங்கள் ஆகிய மக்களும் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad