உறவினர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட சடலங்கள்!
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மாறுபட்டுள்ளன.
குறித்த வைத்தியசாலையின் விடுதி எண் 7 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 89 மற்றும் 93 வயதுடைய இரண்டு பெண்களின் உடல்கள் ஒருவருக்கொருவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் மொரட்டுவ, பகுதியை சேர்ந்த 89 வயது முஸ்லிம் பெண் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் திகதி பாணந்துறை வீரசிங்க மாவத்தையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், அவரது சடலத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சடலம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 93 வயதான பெண்ணின் மகள் திங்கள்கிழமை (28) தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக பொது சுகாதார ஆய்வாளருடன் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சடலம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை மூடிமறைக்க வைத்தியசாலை அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டதாகவும், அந்த பெண் தனது தாயின் உடலை கோரி உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், பல்வேறு தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகு, வைத்தியசாலை மட்டத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை