யாழில் அழிவடையும் அபாயத்தில் வரலாற்றுசிறப்புமிக்க புராதன கற்குகை!
யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க புராதன கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் "மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையே இவ்வாறு அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த குகையானது மூன்று பிரதான வாயில்களைக் கொண்டதாக அறியப்படும் நிலையில், அதன் ஒருபக்க வாயில் கீரிமலை தீர்த்தக் கேணியை சென்றடைவதுடன் மறுபக்க வாயில் தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள விஷ்ணு ஆலயத்தை சென்றடைவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இன்னுமொரு வாயில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை நிலத்துக்கு கீழாக சென்றடையக் கூடிய வகையில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. யுத்தத்திற்குப் பின்னர் கற்குகை அதன் மூன்று பக்க வாயில்களை கொண்டுள்ள நிலையிலும் அதன் இணைப்புகளை இழந்த நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் குகையின் அனைத்து வாயில்களும் மாருதப்பூரவல்லி குகைகளில் தங்கியிருந்து எவருக்கும் தனது குதிரை முகம் தெரியாமல் நிலத்தடியால் , கீரிமலை தீர்த்தக் கேணியில் நீராடி சிவனைத் வணங்கி வந்ததாக செவிவழிக்கதைகள் உள்ளன.
இந்துசமய தொல்பொருள் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் குறித்த கற் குகையினை தற்போது தனியார் ஒருவர் தனது காணி எனச் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமிழ் மக்களுடைய வரலாற்று சின்னமாக விளங்குகின்ற இக் கற்குகையினை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாறுகளை கொண்டு செல்வதற்கு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பிரதேசவாசிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்துகள் இல்லை