• Breaking News

    மற்றையவர்களைவிட கர்ப்பிணி பெண்களையே கொரோனா அதிகம் தாக்கும் - மகப்பேறு மற்றும் பெண்ணியல் மருத்துவ நிபுணர் ஸ்ரீதரன் தெரிவிப்பு!

     ஏனைய நபர்களை விட கர்ப்பிணித் தாய்மார்களை கொரோனா வைரஸ்ஸானது அதிகம் தாக்குகின்றது. இதை உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்டுள்ளது என மகப்பேறு மற்றும் பெண்ணியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இன்றைய தினம் (2021.08.13) யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    உலகளாவிய ரீதியில் covid-19 வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் வைரஸின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை ஏழாக இருந்தது. ஆனால் தற்போது அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    கர்ப்பிணித் தாய்மார்கள் தாங்கள் எதை செய்வதற்கு முன்பும் இரண்டு உயிர்கள் என்பதை மறக்கக்கூடாது. அதாவது வயிற்றில் இருக்கும் சிசு மற்றும் தாயின் உயிர். சிசுவானது வயிற்றில் வளரும் போது ஏற்படும் தாக்கமானது நீண்டகால தாக்கத்தை உண்டாக்கும்.

    கர்ப்பிணித் தாய்மார்களுக்கு covid-19 வைரஸ் தடுப்பு ஊசி ஏற்றுவது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் பலர் மத்தியிலும் எழுகின்றன.

    இதுவரையில் எமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் covid-19 வைரஸ் தொற்றுக்கெதிரானன அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. இதனை கர்ப்பிணிகள் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.

    அதுமட்டுமல்லாமல் தடுப்பூசிகள் அனைத்தும் மற்றவர்களது பாரதூரமான நோய்களையும் இறப்பு வீதத்தையும் குறைப்பது போல கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் செயற்படும்.

    உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின்படி தடுப்பூசிகளை பெற்ற தாய்க்கோ அல்லது வயிற்றிலிருக்கும் சேய்க்கோ குறுகியகால பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகால பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

    ஏனையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது ஏற்படும் சிறுசிறு பக்க விளைவுகள் போல கர்ப்பவதிகளுக்கு ஏற்படலாம். அதாவது தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, உடல் வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றை குறிப்பிடலாம். அவ்விளைவுகளுக்கான சாதாரண வைத்திய சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

    இலங்கையிலுள்ள பல்வேறு துறைசார் நிபுணர்களின் அறிக்கையின்படி தடுப்பூசிகளை கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதம் நடு மூன்று மாதம் மற்றும் இறுதி மூன்று மாதம் என காலப்பகுதியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

    இதுவரை காலமும் இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் தற்பொழுது பைசர், மொதேனா, ஜங்ஷனல் ஜங்ஷன் ஆகிய அனைத்து தடுப்பூசிகளையும் வழங்கலாம்.

    ஆனால் கர்ப்பமாவதற்கு முன்போ அல்லது கர்ப்பமாகிய பின்போ அஷ்ட்ரா செனேகா தடுப்பூசியை முதலாவது செலுத்துகையில் பெற்றால் இரண்டாது செலுத்துகையிலும் அஷ்ட்ரா செனேகாவினை பெற்றுக்கொள்ளலாம்.

    அஸ்ட்ரா சினேகா இரத்தம் உறைகின்ற அளவினை கூட்டுகின்றது என்ற சந்தேகம் உலகலாவிய ரீதியில் அனைவருக்கும் உள்ளது. எனவே எதிர்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலாவது செலுத்துகையாக அஸ்ட்ரா செனேகா கொடுக்கப்பட மாட்டாது.

    அத்துடன் கர்ப்பமடைந்த பெண்கள் மேலே குறிப்பிட்ட தடுப்பூசிகளை பெற்றபின்னர் எவ்விதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழுகின்றது. கர்ப்பமடைந்த பெண்கள் வழமையாக உட்கொள்ளும் உணவுகளைப் போல உட்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை - என அவர் மேலும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad