மற்றுமொரு குற்றச்சாட்டில் சிக்கிய ரிஷாட்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மற்றுமொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியரை ரிஷாட் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் நோயாளர்களை பரிசோதிக்கும் அறைக்குள் வைத்து, கடமை நேர வைத்தியருக்கு இடையூறு விளைவித்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமும் பொரளை காவல் நிலையத்திலும் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு குறித்து சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்களை நடத்திய தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக தெரிவித்து ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், ரிஷாட் பதியுதீன் தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை