யாழ்ப்பாணத்தில் விசேடமாக இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றதா? - சுகாஷ் கேள்வி
யாழ்ப்பாணத்தில் விசேடமாக இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றதா என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொன்னாலையில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதற்கு எதிராக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2021.08.15 அன்று இரவு இராணுவத்தினர் பொன்னாலைப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து மிலேச்சத்தனமாக தாக்குதல் செய்ததில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
எனக்கு எழுகின்ற கேள்வி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற கடப்பாடு பொலிஸாருக்கு இருக்கிறதா அல்லது இராணுவத்துக்கு இருக்கிறதா?
மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்து தாக்குகின்ற அதிகாரத்தினை இராணுவத்திற்கு யார் வழங்கியது?
இலங்கையில் 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆட்சியை ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா? என்ற கேள்விகள் எங்களது மனதிலே எழுந்திருக்கின்றது.
பொன்னாலைப் பகுதி மக்கள் இராணுவத்தினரின் வெறியாட்டத்தினால் மிகவும் அச்ச உணர்விலே இருக்கின்றார்கள்.
இராணுவத்தினரின் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இது சட்டம் ஒழுங்கினை முன் உரிய ஒரு மனித உரிமை மீறல். இலங்கையிலே சித்திரவதைகளும் இராணுவத்தினரின் அட்டூழியங்களும் தொடர்பு கொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
வருகின்ற செப்டம்பர் மாதம் ஜெனிவாவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய அமர்வு ஆரம்பமாக இருக்கின்ற இச்சூழ்நிலையில் இராணுவத்தினரின் இச்செயற்பாடு இலங்கை அரசின் கோரமுகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது - என்றார்.
கருத்துகள் இல்லை