ரெலோவின் தலைவரை விடுதலைப்புலிகளே கொன்றனர்!! செல்வம் எம். பி பகிரங்கம்
ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்- வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிபடுத்த முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நாடாளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீ சபாரத்தினத்தினை கொலை செய்தார்கள். இது உலகறிந்த உண்மை.
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருந்தோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போதும் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம்.
உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம்.
வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை