ஜெனிவா நகர்வினை திசைதிருப்ப பொய்யுரைக்கும் ஜீ.எல்.பீரிஸ் - சபா குகதாஸ் தெரிவிப்பு
ஜெனிவா நகர்வினை திசை திருப்புவதற்கு மாகாணசபை தேர்தல்களை நடாத்த இருப்பதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் பொய் உரைப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபாகுகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவாவின் 46/1 தீர்மானத்தின் படி இலங்கையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது என்பது ஒரு கட்டாயமானதாகும். கோட்டபாய அரசாங்கமானது ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தநிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது தொடர்பில் கேள்விகள் எழும் என்ற ஐயத்தில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் மாகாணசபை தேர்தல்களை எதிர்காலத்தில் நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றார்.
தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் பிரிந்து இருந்தாலும் ஜெனிவாவுக்கு அனுப்புகின்ற கடிதத்தில் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கருத்தும் ஒரு நிலைப்பிட்டினையே அல்லது ஒரு நோக்கத்தினையே சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் அரசாங்க கட்சிகளுடன் இணைந்து பயணிப்பவர்கள், ஜெனிவா விடையங்கள் தொடர்பாகவோ அல்லது அங்கு தமிழ் கட்சிகள் சார்ந்து அனுப்பிய கடிதங்கள் தொடர்பாகவோ விமர்சிப்பதற்கு அவர்களுக்கு அவர்களுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.
ஏனென்றால் எங்களுடைய தமிழினத்தை அழித்த இவ்வளவு போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், அநியாயங்கள், செய்த அந்த அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு, அந்த குற்றங்களை செய்யவில்லை எனக் கூறுகின்ற இந்த அரசாங்கத்துடன் இருந்துகொண்டு இப்படியான வேடிக்கையான கருத்துக்களை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை புரிந்தவர்கள் எவருமே இக்கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை