பத்திரிகையில் வெளியாகிய செய்தி தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம்
முதலிய கோவில் - அரசடி பகுதியில் 19.09.2021 அன்று இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தோம்.
அந்தவேளை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவரது நண்பரான சமூக ஊடக இயக்குனர் ஒருவர் தான் ஊடகவியலாளர் எனத் தெரிவித்து பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொலிஸாரின் அனுமதியை பெறாமல் அவருடன் பேச முற்பட்டார்.
அவர் ஒரு ஊடகவியலாளருக்கு உரிய ஒழுங்கு முறையில் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தராததாலும் தான் ஒரு ஊடகவியலாளர் என அடயாளப்படுத்தாததாலும் நாங்கள் அவரை திருப்பி அனுப்பினோம் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக விளக்கம் அளித்தார்.
நேற்றைய தினம் பத்திரிகையில் வெளியான வட்டுக்கோட்டை பொலிஸார் செய்தியாளருக்கு இடையூறு என்ற செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பொலிஸ் நிலைய பகுதிகளில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களை நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அவர்கள் செய்தி சேகரிக்க வரும்போது உரிய நடைமுறைகளை பின்பற்றி எம்மிடம் தகவல்களை பெறுகின்றார்கள்.
ஆனால் அன்று இரவு தன்னை ஊடகவியலாளர் எனக் கூறியவரிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான அடையாள அட்டை எதுவும் இல்லாமல் சாறத்துடன் பொலிஸ் நிலையம் வந்திருந்தார்.
அவர் செய்தி சேகரிக்கும் நோக்கில் பொலிஸ் நிலையம் வரவில்லை. யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நலம் விசாரிப்பதற்காகவே வந்திருந்தார் என அறியக்கூடியதாக இருந்தது.
ஊடகவியலாளர்களுடன் நாம் நட்புறவாகத் தான் செயற்பட்டு வருகிறோம் அவர்களும் எம்மோடு தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு வேண்டிய செய்திகள் தொடர்பில் நாம் விளக்கம் அளிக்கிறோம்.
ஆகவே நாளுக்கு நாள் பதிவு செய்யப்படாத பல சமூக வலைத்தளங்கள் அதிகரிக்கும் நிலையில் ஊடகவியலாரை இன்னொருவர் தொலைபேசியில் அறிமுகப்படுத்த கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை