யாழில் குழந்தையுடன் யாசகம் பெற்ற தம்பதி - எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த பொலிஸார்!
யாழில். குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரின் மத்திய பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பெண்ணொருவர் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்துள்ளார். சில வேளைகளில் அவருடன் ஒரு ஆணும் இணைந்து மூவருமாக வீதியில் செல்வோரிடம் பண உதவிகளை பெற்று வந்துள்ளனர்.
குறித்த ஆணும் , பெண்ணும் தம்மை தம்பதியினராக காட்டிக்கொண்டு , குழந்தையுடன் , நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வீதிகளில் நின்று , வீதியில் சொல்வோரை வழிமறித்து , தாம் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் , இங்கே உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த வேளை , தற்போது நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் , வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வீடு செல்ல பண உதவி தருமாறு கோரி பண உதவிகளை பெற்று வந்துள்ளனர்.
குறித்த இருவரும் இவ்வாறாக பல வாரங்களாக உதவிகளை பெற்று வந்த நிலையில் . அது தொடர்பில் யாழ்ப்பாண பிரதேச செயலரின் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றதை அடுத்து , அவர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் அப்பெண் , தட்டாதெரு சந்தியை அண்மித்த பகுதியில் குழந்தையுடன் நின்றிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் , அவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் அங்கிருந்து குடும்பமாக வந்து மணியந்தோட்டம் பகுதியில் தங்கி இருக்கின்றனர். தினமும் மணியந்தோட்டம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் ,நகர் மற்றும் நகரை அண்டிய பகுதியில் குழந்தையுடன் வந்திறங்கி , வீதியில் செல்வோரிடம் பண உதவிகளை பெற்று வந்துள்ளனர்.
என்பதனை பொலிஸார் அறிந்து கொண்டனர். அதனை அடுத்து கடுமையாக அவர்களை எச்சரித்த பொலிஸார் அவர்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு பணித்தனர். அத்துடன் குழந்தையுடன் யாசகம் பெற்று மீண்டும் கைது செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை