துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் கைதிகள் - பௌத்தம் தொடர்பில் வகுப்பு எடுக்கும் அரசாங்கத்தின் வக்கிர புத்தியை காட்டுகிறதா? மனோ கணேசன்
அநுராதபுர சிறைக்குள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நடந்து கொண்ட விதம் பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசாங்கத்தின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகிறதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தனது டுவிட்டரில் பக்கத்திலேயே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒரு இராஜாங்க அமைச்சர் அநுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல், ஒரு கிரிமினல் செயல்.
பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசாங்கத்தின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கு பதில் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை