• Breaking News

    இந்த அரசாங்கம் ஜெனிவாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை - சபா தனுசன் குற்றச்சாட்டு!

     


    இந்த அரசாங்கமானது ஜெனிவாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பொதுச் செயலாளர் அவர்கள் சபா தனுசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது நண்பர்களுடன் மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

    கடும் பாதுகாப்புடன் இருக்கின்ற சிறைகளுக்குள்ளே அத்துமீறி உள்நுழைந்து இவ்வாறு செய்வது இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்கள் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறலாகவே அமைகின்றது.

    இது அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பீதியை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே காணப்படுகின்றது. இதனை நாங்கள் சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

    அவர் அப் பதவிக்கான இராஜாங்க அமைச்சுப் பதவியை மாத்திரம் ராஜினாமா செய்து இதனை மூடி மறைக்க முயல்வதை எடுத்துக்கொள்ள முடியாது.

    ஜெனிவா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மனிதாபிமானத்தை இழிவுபடுத்துகின்ற, மனித உரிமையை கேவலப்படுத்துகின்ற இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    மனித உரிமைகள் பேரவையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இந்த மாதிரியான விடயங்களுக்கு எந்தவிதமான காத்திரமான முடிவுகளும் எடுக்காமல் வெறுமனவே கண்துடைப்பாக அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கின்ற செயற்பாடானது தொடர்ந்து மக்களையும், இந்த நாட்டின் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடாகும் இந்த அறிக்கைகளை மக்கள் இனியும் நம்பத்தயாரில்லை.

    உண்மையிலேயே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவும் சரி ஐக்கிய நாடுகள் சபையும் சரி பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காகவும், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா போன்ற போன்ற ஏகாதிபத்திய சக்திகளை தாண்டி எந்தவொரு காரியத்தையும் செயலாற்றாதவையாகத்தான்  கடந்த காலங்களில் நாங்கள் கண்டிருக்கின்றோம்.

    2009ல் இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது இலங்கை அரசாங்கம் வெளியேறு என்று கூறும்போது வெளியேறிய அமைப்புத்தான் ஐக்கிய நாடுகள் சபை. இன்று வரைக்கும் எந்த ஒரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் ஏமாற்று அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad