விபத்திற்கு பின் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டி வாய்க்காலுக்குள் விழுந்தது - சாரதி தப்பியோட்டம்
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி வாய்க்காலுக்குள் விழுந்துள்ள நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்று நண்பகல் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் ஐந்தடிவான் பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த யுவதி ஒருவரை முச்சக்கரவண்டியில் சென்றவர் மோதியுள்ளார்.
இதன்போது யுவதி வீதியில் விழுந்துள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாத முச்சக்கரவண்டி சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து வீதியில் பயணித்தவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டியை பிடிப்பதற்கு துரத்திய போது வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
இருப்பினும் சாரதி முச்சக்கரவண்டியையும் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை