இணைய வழி கற்றலில் ஈடுபட்டிருந்த சிறுமி திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 இல் கல்வி பயிலும் 13 வயது சிறுமியெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை