• Breaking News

    வியாழேந்திரன் ஊடகவியலாளர்களை மிரட்டி அரசியல் நடத்த முடியாது- மட்டக்களப்பு மக்கள் மடையர்கள் அல்ல!

     இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அநுராதபுரம் சிறைசச்சாலையில் செய்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது குழு அமைத்து விசாரிக்க வேண்டிய விடயம் அல்ல நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய விடயம்.

    இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளருக்கு  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார். இவ்வாறு அச்சுறுத்தி அரசியல் நடத்த முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் என்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

    இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியது ஒரு பாரிய குற்றமாகும். சிறைக் கைதிகள் ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்தின் கட்டளைக்கு உட்பட்டு தான் அங்கிருக்கின்றார்கள். எனவே இது ஒரு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

    அரசு இதைப்பற்றி விசாரிப்பதற்குக் குழு அமைத்திருக்கின்றது. இதற்கு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை. இது நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய விடயம். இது நீதிமன்றத்தினால் தான் விசாரிக்கப்பட வேண்டும். நீதி அமைச்சர் இவ்விடயத்திற்கு மன்னிப்புக் கேட்கின்றார். இதில் மன்னிப்புக் கேட்க வேண்டிதில்லை. இது மன்னிப்புக் கேட்கும் விடயமும் அல்ல, மன்னிக்கும் விடயமும் அல்ல, மறக்கும் விடயமும் அல்ல.

    இது ஒரு பாரிய குற்றச் செயலாகும். அதனை விட ஒரு பெரிய மடத்தனமான வேலை மட்டக்களப்பில் நடந்திருக்கின்றது. பொதுஜன பெரமுன, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவரை அனுப்பியிருக்கின்றது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் இவரை வரவேற்றிருக்கின்றார்கள். அவர்கள் இவரை அனுப்ப வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும்.

    இவரது வரலாறு தெரியாதவர்களா இவர்கள். 12 முஸ்லிம்களின் கொலை செயற்பாட்டிற்குக் காரணமாயிருந்து ஒரு பிரச்சினையை எழுப்பியவர். கொலை செய்வதும், அச்சுறுத்துவதும் இவர்களுக்கு லட்டு உண்பதைப் போல் இருக்கின்றது. இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளருக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்.

    இவ்வாறு அச்சுறுத்தி அரசியல் நடத்த முடியாது என்பதை அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்களை இந்த இடத்தில் வைத்தவர்கள் மக்கள். மக்களையோ, ஊடகவியலாளர்களையோ அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை.

    மட்டக்களப்பு மக்களை மடையர்கள் என்று நினைக்கின்றார்கள் இந்தப் பொதுஜன பெரமுன குழுவினர். இது மிகவும் வேதனையளிக்கக் கூடிய காரியம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad