கப்ராலின் ஆளுநர் பதவி! நரியிடம் கோழிக் கூண்டை ஒப்படைப்பதைப் போன்றது - ஜே.வி.பி சீற்றம்
அஜித் நிவாட் கப்ராலுக்கு மத்திய வங்கி ஆளுனர் நியமனத்தை வழங்குவதானது, நரியிடம் கோழிக் கூண்டை ஒப்படைப்பதைப் போன்ற செயலாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
அரிசியல்வாதியொருவருக்கு அல்லது அரசியலில் ஈடுபடுகின்ற நபரொருவருக்கு மத்திய வங்கி ஆளுனராக பதவி வகிக்கக்கூடிய உரிமை இல்லை எனவும் அவர் மேரும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்றைய தினம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகக் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும்அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரிசியல் வாதியொருவருக்கு அல்லது அரசியலில் ஈடுபடுகின்ற நபரொருவருக்கு மத்திய வங்கி ஆளுனராக பதவி வகிக்கக்கூடிய உரிமை இல்லை.
அத்தோடு அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதியொருவர் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டால் அது மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணும் நிறுவனமான மத்திய வங்கி சுயாதீனமானதாகும்.
இவ்வாறான நிறுவனத்தின் பிரதானியாக நிதி இராஜங்க அமைச்சராக செயற்பட்ட நபர் அந்த பதவியிருந்து விலகி ஆளுனராக பதவியேற்க உள்ளமையில் நிச்சயம் அரசாங்கத்தின் தலையீடுகள் காணப்படும் என்பதை உறுதியாகக்கூற முடியும்.
பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அஜித் நிவாட் கப்ராலுடைய அனுபவங்களை உபயோகித்துக்கொள்வதற்காகவே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்படுகிறது என்று எவரேனும் கூறினால், அது நரியிடம் கோழிக் கூண்டை ஒப்படைப்பதைப் போன்றதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை