பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட த.தே.ம.முன்னணியை சேர்ந்தவர்களின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்த சுகாஷ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டவேளை அவர்களின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் பிரபல சட்டத்தரணியுமான க.சுகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
தியாகதீபத்தை நினைவேந்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்ட எமது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜீவ்காந்த் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர் தங்கராஜா ராஜசிறீக்காந்தன் ஆகியோரின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள்.
விசேடமாகக் கைது இடம்பெற்றதிலிருந்து பிணையில் விடுவிக்கும்வரை களத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றி ஆதரவுக்கரம் நீட்டிய ஊடக உறவுகள், சட்டவிரோதக் கைதைக் கண்டித்து அறிக்கைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைத்தள உறவுகள், நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு விசுவாசமாக எமது அரசியல் பயணம் தொடருமென்று இன விடுதலைக்காக ஆகுதியாகிய ஆத்மாக்களின்மீது சபதமெடுக்கின்றோம். - என்றுள்ளது.
கருத்துகள் இல்லை