ஐ.நாவிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்த தற்போதைய அரசாங்கம் - சுட்டிக்காட்டும் மனோ கணேசன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர்கள் தரப்பில் பல கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இருக்கின்ற ஒற்றுமையை மேலும் குறைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டங்களின் போது மாத்திரம் தூக்கத்தில் இருந்து விளித்துக் கொள்ளாமல், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைவரும் விழிப்புடன் இணைந்து பயணிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் மேலும், எதிர்வரும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் இடம்பெறும் மனித உரிமை கூட்டங்களில் மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் இலங்கையில் எதிர்நோக்கும் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தனது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கான செயற்பாடுகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக் காலத்தில், இலங்கை அரசும் ஒரு பங்காளியாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தன்னை திருத்திக் கொள்ளவும், கடந்தகால குற்றங்களுக்கு விடை தேடவும் இணக்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல விடயங்கள் இடம்பெற்றதாகவும், பல விடயங்கள் இடம்பெறவில்லை எனவும், எனினும் ஐக்கிய நாடுகள் சபையுடன் “தமிழர்களின் வழக்கு” நல்லாட்சியிலேயே ஆரம்பமானதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், அதிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்ததாகவும், அதையடுத்து, இவ்வருடம் மார்ச்சில் மனித உரிமைகள் பேரவை கூடி இலங்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை