கொட்டடி மக்களின் மனிதநேயம் வீட்டிற்கு ஒரு பார்சல் திட்டம்! -பல தரப்பினரும் பாராட்டு-
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு யாழ்ப்பாணம் கொட்டடி வாழ் மக்களின் வீட்டுக்கு ஒரு பார்சல் வழங்கும் திட்டம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
கல்லுண்டாய் புதிய கிராமத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் யாழ்.நகரில் யாசகம் பெறுவோருக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து ஊரடங்கு காரணமாக திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கும் இவ்வாறு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
வெண்கரம் அமைப்பின் ''வயிற்றுப்பசி போக்க வாருங்கள் ஒன்றிணைவோம்'' என்ற தொனிப்பொருளிலான ஒழுங்குபடுத்தலில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கொட்டடியில் உள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கொட்டடி வர்த்தகர்களும் இணைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
கொட்டடியில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளில் சமைக்கும் உணவில் ஒன்று அல்லது இரு பார்சல்களை தினமும் வழங்கி வருகின்றனர்.
மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மதியம் மற்றும் இரவு என இரு வேளைகள் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மேற்படி குடும்பங்களுக்கு குளுக்கோஸ் மற்றும் இளநீர் என்பனவும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் இத்திட்டத்தை வரவேற்றுள்ளதுடன் இத்திட்டத்தை செயற்படுத்தும் கொட்டடி இளைஞர்களையும் பாராட்டியுள்ளார். கொட்டடி ஜே-81 கிராம சேவையாளரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார். மேலும் பலர் இத்திட்டத்தை பாராட்டியுள்ளனர்.
இதேவேளை, கடந்த யுத்த காலத்தில் திடீர் திடீரென ஏற்படும் மோதல்களால் இடம்பெயரும் மக்களுக்கு வடக்கு – கிழக்கு மக்கள் இவ்வாறு பார்சல் வழங்கும் திட்டத்தை செயற்படுத்தி மனிதநேயத்துடன் செயற்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை