இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் பேருந்துகளில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
தம்புள்ளையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை, அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்டோபர் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் கோவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்து நடத்துனரே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணி புரிகின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அத்துடன், கூடுதலான கட்டணம் அறவிடக்கூடாது. பேருந்துகளில் யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன் முழுப் பொறுப்பும் நடத்துனருக்கே உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்காணிப்பதில் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், கோவிட் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக போக்குவரத்து அமைச்சினால் 50,000 ரூபா பெறுமதியுள்ள வருடாந்த நிவாரண பொதி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை