தாயும் சேயும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் பால்வார்த்து அஞ்சலி செலுத்திய உறவினர்கள்
2015ம் ஆண்டு 08ம் மாதம் 09ம் திகதி படுகொலை செய்யப்பட்ட தாயான சயிந்திகாவுக்கும் அவரது மகனான பொபிஷணனுக்கும் அவரது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில், நேற்று முன்தினம் (09) பால்வார்த்து அஞ்சலி செலுத்தினர்.
2015.08.09 அன்று, சயிந்திகாவும் பொபிஷணனும் யாழ். கோண்டாவிலில் உள்ள சயிந்திகாவின் தாயார் வீட்டிலிருந்து, கணவனது ஊரான வவுனியா - முருகானூர் கிராமத்திற்கு கணவனுடன் சென்றுள்ள நிலையில் அன்றைய தினமே இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
மகளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு என பல இடங்களுக்கு சென்று முறைப்பபாடு செய்ததன் அடிப்படையில் ஆறு வருடங்களின் பின்னர் கடந்த 2021.08.07 அன்று சயிந்திகாவின் கணவன் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த இருவரையும் தான் கொலை செய்ததாகக்கூறி கொலைசெய்து புதைத்த இடமான வவுனியா - முருகனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த வீட்டினை அடையாளங்காட்டினார்.
ஆறு வருடங்களாக மகள் இருக்கும் இடம் தெரியாத நிலையில் பல இடங்களில் தேடிவந்த குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் கோண்டாவில் பகுதி வாழ் மக்களுக்கும் குறித்த கொலைச்செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியது.
குறித்த தாயினதும் சேயினதும் ஆத்மா சாந்தியடைவதற்கு, சயிந்திகாவும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களது பெற்றோரும் கோண்டாவில் வாழ் உறவினர்களும் பால்வார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை