48 மணி நேரம் இருளில் மூழ்குமா நாடு ?
நாடு முழுவதும் உள்ள மின்சார சபை ஊழியர்கள் நாளை புதன்கிழமை கொழும்பில் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் நாட்டில் 48 மணி நேரங்களுக்கு மின் விநியோகத்தில் இடை யூறுகள் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் மின்சார விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் வேண்டுமென்றே பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஏதேனும் காரணங்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய போராட்ட காலப் பகுதியில் கிட்டத்தட்ட 48 மணி நேரங்களுக்கு ஊழியர்கள் யாரும் வரமாட்டார்கள் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை காலை கொழும்பில் செய்தியாளர் களிடம் பேசும்போதே ரஞ்சன் ஜெயலால் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் 3ஆம் திகதி நாங்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக அவர்கள் நாடு முழுவதும் இருந்து வருவார்கள்.
இந்நிலையில் மின் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டால் அதனைச் சரி செய்யயாரும் இருக்கமாட்டர்கள் என்றார்.
இவ்வாறான போராட்டத்தால் கெரவலப்பிட்டி - யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் மறு பரிசீலனை செய்யும் என நம்புகிறீர்களா? என அவரிடம் கேட்ட போது, அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிடும் போது அரசாங்கம் நிச்சயமாக அதற்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும்-என்றார்.
கருத்துகள் இல்லை