ஊடகவியலாளர் தாக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று (28) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,அரசியல் பிரமுகர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு நகரப்பகுதியில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சமூக செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை