இலங்கையின் தேசியக் கொள்கைகள் புத்தரின் போதனைகளால் வடிவமைப்பு...
சிறிலங்காவின் தேசியக் கொள்கை கட்டமைப்பானது சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு தொடர்பான புத்தபெருமானின் போதனைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது பெரும் மதிப்பை அளிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீலப் பசுமைப் பொருளாதாரம் என்ற கருத்தின் கீழ் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதே அரசாங்கக் கொள்கையின் அடித்தளமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 21ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஆற்றிய சிறப்புரையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் நார்கள், அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களால் 2021 மே மாதம் ஏற்பட்ட எம்.வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தை சுட்டிக்காாட்டிய அமைச்சர், சுற்றாடல் பாதிப்பு சிறிலங்காவில் மாத்திரம் மட்டும் உணரப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட கடல் சூழலிலும், சுற்றாடல் பாதிப்பின் நீண்டகால விளைவுகள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமுத்திரம் 70 மில்லியன் சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட மூன்றாவது பெரிய சமுத்திரமாவதுடன், இந்த சமுத்திரத்தின் எல்லையில் கடல் வளங்கள் மீதான போட்டி அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பதற்கும் அமைதியான முறையில் ஈடுபடுவதற்குமாக உரிய வாய்ப்புக்களை மிகவும் நிலையான முறையில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டக்கூடிய பிராந்திய வழிமுறைகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் பீரிஸ், சுற்றுச்சூழலுக்கு மாத்திரமன்றி வாழ்வாதாரத்துக்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய அனர்த்தங்களைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய கூட்டு நடவடிக்கையை முன்மொழிவதில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சிறிலங்கா முன்னிலை வகிக்கும் எனக் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் புதிய உரையாடல் கூட்டாளராக ரஷ்யக் கூட்டமைப்பை வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர், பிராந்தியத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கும், பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை தொடர்ந்தும் ஆழப்படுத்துமாறு உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை