பெண் வேடமிட்டு நடித்த ஆணுக்கு லட்சக்கணக்கில் டீல் பேசிய செல்வந்தர்...
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம்.பி.யு.சின்னப்பாவைச் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டது குறித்தும், அதற்கு பி.யு.சின்னப்பா விதித்த நிபந்தனை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்ட போது 1949இல் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
Representational Image |
அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற பேரும்புகழும் பி.யு.சின்னப்பாவிற்கும் இருந்தது. பி.யு.சின்னப்பா புதுக்கோட்டையில் வசித்துவந்தார். நடிப்பதற்காக மட்டும் அவ்வப்போது சென்னை சென்று வருவார். பி.யு.சின்னப்பா நடிப்பு சிவாஜி போலவும், சண்டைபோடும் விதம் எம்.ஜி.ஆர் போலவும் இருக்கும். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கலந்த கலவையாக பி.யு.சின்னப்பா இருந்தார். வாய்ப்பு கேட்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு, "தம்பி நீ பார்க்க ஆள் நல்லாத்தான் இருக்க... ஏதாவது நாடகக் கம்பெனிக்குப் போறியா" என்றார். மேலும், "நீ நாடகத்தில் நடித்துவிட்டு வா.. உன்னப் படத்தில் நடிக்க நான் சேர்த்துவிடுறேன்" என்றார். அவர் கூறியதைக் கேட்டு எனக்கு மிகுந்த சந்தோசம். அந்தச் சந்தோசத்திலேயே கிளம்பி ஊருக்கு வந்துவிட்டேன்.
முதலில், நான் பி.யு.சின்னப்பாவைப் பார்த்துவிட்டு வந்தேன் என்ற விஷயத்தை என் ஊரில் யாருமே நம்பவில்லை. பின், அது உண்மை என்று தெரிந்து எங்கள் வீட்டின் முன் ஊரே திரண்டுவிட்டது. நாடகத்தில் நடித்துவிட்டு வா... வாய்ப்பு தருகிறேன் என்று பி.யு.சின்னப்பா கூறியதாக என் அண்ணனிடம் கூறியதும் கடன் வாங்கி எனக்காக 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற நாடகத்தை ஆரம்பித்துவிட்டார். நான் அதில் வில்லனாக நடித்திருந்தேன். நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் இது என் அண்ணன் போட்ட சொந்த நாடகம். ஏதாவது நாடகக் கம்பெனியில் நடித்து அதற்கான சான்றிதழோடு வா என்று பி.யு.சின்னப்பா கூறியிருந்தார். அதனால் விருதுநகரில் என் அண்ணனுக்கு தெரிந்த ஒரு நாடகக் கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு 'விதி' என்று ஒரு நாடகம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அங்கிருந்த பெண்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருந்தார்கள். சினிமாவில்கூட அப்படி அழகான பெண்களைப் பார்க்க முடியாது. நானும் என் அண்ணனும் அங்கு உட்கார்ந்து நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.நாடகம் முடிந்தவுடன் நாடகக்குழு தலைவரிடம் சென்ற செல்வந்தன் ஒருவர், கையில் ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை என்னுடன் அனுப்பு என்றார். அன்றைக்கு ஒரு லட்சம் என்றால் இன்றைக்கு நூறு கோடி. 'யோவ்... போய் வேற வேல இருந்தா பாருயா..' என்று அந்த நாடகக் கம்பெனி முதலாளி அவரிடம் கூறினார். ஆனாலும் அவர் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த முதலாளி செல்வந்தரை அருகில் அழைத்து, 'அது பொண்ணு இல்லயா... ஆம்பள' என்றார். என்னை ஏமாத்தப் பாக்குறீங்களா என்று கூறி செல்வந்தர் தொடர்ந்து ரகளை செய்துவந்தார். இது அனைத்தையும் பெண் வேடம் அணிந்த அந்த நபர் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டு இருந்தார். முதலாளி எவ்வளவு கூறியும் அந்த செல்வந்தர் கேட்காததால் அரை டவுசருடன் வெளியே வந்த அந்த நபர், 'யோ... என்னயா என்னை வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்க... நான் ஆம்பளையா' என்றார். 'நீ ஆம்பளையா...' என அந்த செல்வந்தர் மேலும் கீழும் பார்த்தார். பின், 'சரி... ஆம்பளையா இருந்தாலும் நான் கூட கூட்டிட்டு போறேன்... நான் அந்த நினப்புலயே நிறைய கனவு கண்டுவிட்டேன்... இந்த பணத்தை வாங்கிவிட்டு அந்தப் பையன என்கூட அனுப்புங்க' என்றார். அதைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி.
உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து தலையிட்டு அந்த செல்வந்தரை அனுப்பி வைத்தனர். போகும்போது 'என்னை மீறி இந்த ஊரில் இனி எப்படி நாடகம் நடத்துறீங்கன்னு பார்க்குறேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றார். நாடகக்கம்பெனி முதலாளியை அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர், 'அந்தாளு கொஞ்சம் விவகாரமான ஆளு... நாடகக் கொட்டகைக்கு தீ வச்சாலும் வச்சுடுவான்... நீங்க கம்பெனிய காலிபண்ணிட்டு வேற ஊருக்கு போயிருங்க என்றார். அந்த முதலாளியும் சரி எனக்கூறி நாடகக்கம்பெனியை அங்கிருந்து காலி செய்தார். வாய்ப்பு தேடிவந்த எனக்கு இங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண் வேடமிட்டு அந்த நாடகத்தில் நடித்தது நடிகர் முத்துராமனின் மச்சினன். பின்னாட்களில் அவர்தான் அன்னக்கிளி படத்தை இயக்கினார். அந்தக் காலத்தில் பெண் வேடமிட்டு நடிப்பதில் அவரை மிஞ்ச ஆட்களே கிடையாது.
கருத்துகள் இல்லை