சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்கத் தொடங்கியாள்ளது...!
ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற 43 ஆவது படையணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் பிரச்சினை பல்வேறு மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்கத்திடம் உள்ள 1.5 பில்லியன் கையிருப்பு தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது. டொலர் பிரச்சினை காரணமாக சமூகத்தில் கறுப்பு சந்தை தோற்றம் பெற்றுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன.பொருட்களின் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை வர்த்தகர்கள் கையிலெடுத்துள்ளார்கள்.
2022ஆம் ஆண்டு 7ஆயிரம் மில்லியன் அரச முறைகடன் செலுத்தப்பட வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி நூற்றுக்கு ஐம்பது வீதம் குறைவடைந்துள்ளது. அரச முறை கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் கடன் கிடைக்காத போது வரையறையற்ற வகையில் நாணயம் அச்சிடப்படுகிறது. வெளிநாட்டு கடன் கிடைக்காத போது டொலர் கையிருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பொருள் இறக்குமதி தடை செய்யப்படுகிறது.நாணயம் அச்சிடுவதற்கும்,பொருள் இறக்குமதி தடை செய்வதற்கும் படித்து பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையின் காரணமாக நாடு கட்டம் கட்டமாக அழிவை நோக்கி செல்கிறது.
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 43ஆவது படையணி சார்பில் பகிரங்கப்படுத்துவோம். பொருளாதார பாதிப்பு ராஜபக்ஷர்களுக்கு எவ்வித்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.இந்த சூழ்நிலை தொடர்ந்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை