• Breaking News

    அத்துமீறி காணி அபகரிப்பில் ஈடுபட்ட தவிசாளர் - மக்கள் குற்றச்சாட்டு...!

     


    மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட கிராங்குளம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள அரச காணி மற்றும் தனியார் காணியையும் சேர்த்து அவை தமக்குச் சொந்தமானது என சுற்று வேலியிட்டு மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தர்மரத்தினம் தயானந்தன் என்பவர் அடைத்துள்ளதாக கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


    குறித்த காணி பிரதேச சபைத் தவிசாளரினால் தூண்கள் இட்டு முட்கம்பிகள் பொருத்தி சுற்று வேலி அடைக்கப்பட்ட இடத்திற்கு இன்று மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர், காத்தான்குடி உதவிப் காவல்துறை அத்தியட்சகர் இந்திக்க பிறேமதிலக்க, காத்தான்குடி காவல்நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி, பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மன்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார், கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர், குறித்த நிலப்பரப்பை அடைத்துள்ள மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தர்மரத்தினம் தயானந்தன் உள்ளிட்ட பலரும் சென்று குறித்த நிலப்பரப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.





    இவ்வாறு அடைக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒருபகுதி அரச காணி எனவும், ஏனையவை தனியார் காணி எனவும், அரச காணியை எல்லையிட்டு அடைக்கப்பட்டிருப்பதை உடன் அகற்ற வேண்டும் எனவும், இல்லையேல் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பப்படும் என பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.

    ஏனைய நிலப்பரப்பின் ஒரு ஏக்கர் மிக நீண்டகாலமாக இருந்து சிங்கள சகோதரி ஒருவருக்குச் சொந்தமானது அதனை எமது விளையாட்டுக் கழகத்திற்கு அவர் 2015 ஆண்டு உத்தியோக பூர்வமாக உறுதி எழுதி தந்துவிட்டார்.

    இதனுள் நாம் மிக நீண்டகாலமாகவிருந்து விளையாடி வருகின்றோம். அதற்குரிய உறுதி, வரைபடம் எல்லாம் எம்மிடம் உள்ளன. இந்த மைதானத்திற்கு அரசாங்கத்தினால் கிரவல் இட்டு புனரமைப்பும் செய்து தரப்பட்டுள்ளது. இக்காணியைத்தான் மண்முனைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் அவருடைய காணி என அத்துமீறி அடைத்துள்ளார்.

    இது சட்டத்திற்கு முரணானது என்பதோடு எமது கிராமத்தின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுக்களும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது என கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் என்.ஜசோகரராஜ் தெரிவித்தார்.

    இதன்போது விளையாட்டுக் கழகத்தினருக்கும் பிரதேச சபைத் தவிசாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற அதிகார்கள் உடன் அவ்விடைத்தைச் சுற்றி இடப்பட்டுள்ள வேலையை அகற்றுமாறும், தவிசாளருக்கு உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்த தவிசாளரை குறித்த விடயம் தொடர்பில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள், கேட்டதற்கிணங்க இது எமது நீண்டகாலச் சொத்து இதனை நாம் 50 வருடகாலமாக பராமரித்த வருகின்றோம்.

    இதனை நீதிமன்றத்தை நாடி மீட்டெடுக்கத் நான் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்து விட்டு அவ்விடத்திலிருந்து பிரதேச சபை தவிசாளர் வெளியேறிச் சென்றார்.

    இந்தக்காணி கிராங்குளம் விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமானது. இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பிரதேச சபைத் தவிசாளர் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளார்.

    தற்போது அதிகாரிகள் தெரிவித்த விடயங்களுக்கு இணங்கி தவிசாளர் செயற்படவில்லையாயின் நான் முன்னின்று சட்டதிட்டங்களுக்குட்பட்டு இக்காணியை இந்த விளையாட்டுக் கழகத்தினருக்குப் பெற்றுக்கொடுப்போன்.

    மேலும் இந்த மைதானக் காணியை புணரமைப்பு செய்வதற்கு 5 மில்லியன் நிதி ஒது கீடு செய்துளோம் என இதன்போது மன்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

    இளைஞர்கள் அவ்விடத்தில் தொடர்ந்து விடையாடுமாறும், விளையாட வேண்டாம் என நீதிமன்ற கட்டளை வந்தால் விளையாட முடியாது எனவும் அதிகாரிகள் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad