மாதகலில் காணி சுவீகரிப்பு மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது...
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மாதகல் மாரீசன்கூடல் ஜே/150 பகுதியில் கடற்படைக்கு சொந்தமானது எனக்கூறப்படும் காணி மற்றும் மயானத்திற்கு சொந்தமான காணி என்பவற்றை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையொன்று அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
விஸ்தீரணம் 1.6 ஹெக்டயர் பரப்புள்ள காணியையே சுவீகரிப்பதற்கு நில அளவைத்திணைக்களத்தினர் வந்திருந்தனர். எனினும் ஊர்மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையடுத்து நிலஅளவை திணைக்களத்தினர் திரும்பி செல்ல முயன்ற போதும் , குறித்த படைப்பிரிவிற்கான கட்டளைத்தளபதி பேச்சுவார்த்தையின் மூலம் இதனை தீர்க்கலாம் என்றும் நில அளவை திணைக்களத்தினரை அளவிட அனுமதிக்குமாறும் கேட்டார்.
எனினும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக கடிதம் ஒன்றையும் நில அளவைதிணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடற்படை தளபதி பிரதேச செயலாளர் மூலம் அனைத்து தரப்பினரையும் இணைத்து பேச்சு வார்த்தைக்கு ஒழுங்குபடுத்துமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க அடுத்த வாரமளவில் கூட்டத்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அத்தோடு பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நிலஅளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்க பிரதிநிதி இப்பிரதேசம் எமது வாழ்வாதார பிரதேசமாவதோடு குறித்த காணிக்கருகில் போதிப்புலம் இந்துமயானம் காணப்படுவதாகவும் கடற்படை தற்போது வைத்துள்ள காணிக்குள் சிறுவர்களை நல்லடக்கம் செய்யும் இடம் இருக்கின்றது. இவர்களால் எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. எனவே இவர்கள் இங்கிருந்து வெளியேற்ற படவேண்டும் என்றார்.
மேலும் வட்டார உறுப்பினர் கருத்து வெளியிடுகையில், குறித்த பகுதிக்குள் மயானத்திற்கு சொந்தமான காணி இருப்பதாகவும் இதனை சட்டரீதியாக பெற்றுத்தருமாறும் பிரதேச சபை ஊடக பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம். எனினும் இந்த பின்னணியில் இவர்கள் காணி சுவீகரிப்பில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது. இவர்களுக்கு இந்த காணி வழங்கப்படுமிடத்து எமது கடற்றொழிலாளரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் இதில் கரிசனை கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை 2020.10.08 ம்திகதிய அதிவிசேட வர்தமானி பிரகாரம் காணி அமைச்சரால் குறித்த காணி பகிரங்க தேவைகருதி காணி எடுத்தற்சட்டம் 5ன்கீழ் காணி கொள்வனவு செய்யபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றஜீவ்காந், வட்டார உறுப்பினர் ,கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை