மறைந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருக்கு கஜதீபன் இரங்கல்...
மக்கள் மத்தியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எந்நேரமும் பரபரப்பு அரசியலை மேற்கொள்பவர்கள் மத்தியில் தான் சார்ந்த மக்களுக்காக சிவயோகன் அவர்கள் நேர்மையாக பணியாற்றியவர் என்பது பெருமைக்குரிய விடயம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
அமரத்துவம் அடைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வே.சிவயோகன் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரை ஆற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
சிவயோகன் அவர்கள் தமிழரசு கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய மத்திய குழு உறுப்பினராக உயர்ந்தவர். ஆனாலும் அவர் கூட்டமைப்பாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை செயற்பட்டார்.
மாகாண சபையில் பல்வேறு ஆக்கபூர்வமான உரைகளை ஆற்றி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை திடம்பட நிறைவேற்றியவர். இன்று ஐறோட் வேலைத்திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகளை திறந்து வைத்து தமது அரசியலை முன்னெடுப்பவர்கள் அமரர் சிவயோகன் அவர்களை நன்றியோடு நினைவுகூரவேண்டும்.
ஏனெனில் மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட "ஐ றோட் " வேலைத்திட்டத்தில் முக்கிய பங்காற்றி அத்திட்டத்தை செயற்பட வைத்தவர். இவ்வாறான ஒருவரின் இழப்பு எமது தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை