ஜேர்மனியில் திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு - நால்வர் படுகாயம்...!
ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில், 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்ற பகுதியை காவல்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பவேரியாவின் மாநில உள்துறை அமைச்சர், வெடிகுண்டு தோராயமாக 550 பவுண்டுகள் எடை இருக்கும் என்று கூறினார்.
உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜேர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கட்டுமானப் பணியின்போது கண்டறியப்படுகின்றன. ஜேர்மனியில் ஆண்டொன்றுக்கு 2000 தொன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை