யாழில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பரிதாபமாக பலி...!
யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
“6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.
நேற்று மூச்சுத் திணறலுக்குள்ளான அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குறித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று வைத்தியசாலையினரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த குடும்பப்பெண் கொவிட்-19 தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் சடலம் தகனம் செய்யப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை