• Breaking News

    35 வருடங்கள் காத்திருப்பு : 65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...!

     


    சிக்கண்ணாவின் காதல் காத்திருப்பைப் புரிந்துகொண்ட ஜெயம்மா, காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார். விளைவு, காலமெல்லாம் காத்திருந்து தன் காதலியை கரம் பிடித்தார் சிக்கண்ணா.

    கர்நாடக மாநிலத்தில் 35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் முதியவர் ஒருவர்.

    கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்தவர் சிக்கண்ணா. இவர் இளம் வயதில் இருந்தபோது ஜெயம்மா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், இவர்கள் காதலுக்கு மரியாதை கிடைக்கவில்லை.

    ஜெயம்மாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள், அவரது குடும்பத்தினர். ஆனால், இந்தத் திருமண பந்தம் நீடிக்கவில்லை. ஜெயம்மாவுக்கு குழந்தை பிறக்காததால், அதைக் காரணம் காட்டி 30 வயதில் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்த விஷயம் சிக்கண்ணாவுக்கு தெரிய வந்ததும், அது வரை திருமணம் செய்யாமல் காதலி நினைவோடு இருந்தவர், தன் காதலியைக் காண ஓடோடி வந்தார்.

    ஜெயம்மா மீது அதே அன்பும் காதலும் இருப்பதை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் சிக்கண்ணா. ஆனால், சமூகம் என்ன சொல்லுமோ எனப் பயந்து ஜெயம்மா, இரண்டாம் திருமணத்திற்கு மறுத்தார்.

    ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சிக்கண்ணா, ஜெயம்மாவை எப்படியும் திருமணம் செய்யும் முயற்சியைத் தொடர்ந்தார். ஆனாலும், ஜெயம்மா சம்மதிக்கவிலை.

    ஜெயம்மா நினைப்பிலேயே இருந்த சிக்கண்ணா, அவர் எப்படியும் மனம் மாறி வருவார் என்று காத்திருந்தார். இப்படி காத்திருந்தத்தில் 35 ஆண்டுகள் ஓடிவிட்டதுதான் காலத்தின் கொடுமை.

    சிக்கண்ணாவின் காதல் கதையை நினைத்து உருகி மருகிய அவருடைய உறவினர்கள், ஜெயம்மாவை சந்தித்து, இப்போதாவது திருமணத்துக்குச் சம்மதிக்கும்படி கேட்டனர். சிக்கண்ணாவின் காதல் காத்திருப்பைப் புரிந்துகொண்ட ஜெயம்மா, காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

    விளைவு, காலமெம்மால் காத்திருந்து தன் காதலியை கரம் பிடித்தார் சிக்கண்ணா. மாண்டியா மேல்கோட்டையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

    65 வயதில் சிக்கண்ணா - ஜெயம்மா தம்பதியைத் திருமண கோலத்தில் பார்த்தவர்கள், வயது வித்தியாசமின்றி வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார்கள்.

    அவர்களுடைய திருமண புகைப்படமும் காணொலியும் இணையத்தில் பரவ, திருமண வாழ்த்து கடல் கடந்தும் குவிந்துவருகின்றன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad