பசியால் இறந்த 5 வயதுச் சிறுவன்...!
தமிழகம் விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன், தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ஆம் திகதி தள்ளுவண்டியில் போர்வையால் மூடிய நிலையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளான். சிறுவனின் உடலை கைப்பற்றிய விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லை; அதனால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுவனை அடையாளம் காணும் கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் சென்றுள்ளன.
பசிக்கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை