வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் - வாசுதேவ தெரிவிப்பு...!
வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியதாகவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது எமது நாடு நடுநிலையாக செயற்பட்டு இருந்தது. தற்போதும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுகின்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.
நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவுமில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும்.
வடக்கில் இந்தியாவும் சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை