• Breaking News

    மலேசியாவில் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட தமிழர்! - மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை...!

     


    கடந்த ஆண்டு மலேசியாவில் அடித்துக்கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    06-09-2020 அன்று மலேசியாவில், கணபதிப்பிள்ளை விவேகானந்தன் என்னும் குடும்பஸ்தர் அந்நாட்டவர்களினால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பில் இதுவரையில் தனக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்து படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியான  பிருந்தாஜினி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

    மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


    பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் அடித்து கொல்லப்பட்டவரின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அவர், இதேபோன்று தனது கணவனும் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக யாரும் பேசுவதற்கு கூட முன்வரவில்லையெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

    இதன்போது கருத்து தெரிவித்த உயிரிழந்தவரின் மனைவி,

    முதலில் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டவருக்கு எனது குடும்பம் சார்பாக அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


    நான் செங்கலடியில் இருக்கின்றேன். எனது பெயர் திருமதி பிருந்தாஜினி விவேகானந்தன்.06-09-2020 ஆம் திகதி மலேசியாவில் எனது கணவரை கொடூரமாக தாக்கி கொலை செய்திருந்தார்கள். தகப்பனை பத்து வயதில் இழந்த மகனும், அவனது தாயும் இன்று அது தொடர்பில் நாங்கள் பேசவந்துள்ளோம்.

    எனது கணவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் எனக்கு எந்த விதமான உதவியோ, நீதியோ கிடைக்கவில்லை. அண்மையில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சகோதரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் எனது கணவருக்கு ஆதரவாக யாரும் ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லையென்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது.

    நான் இங்கு இனவாதம் பேசவில்லை. பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர் ஒரு சிங்களவர் என்ற அடிப்படையிலா அனைவரும் குரல் கொடுத்தார்கள். நான் வறுமை நிலையில் உள்ள பெண் என்ற காரணத்தினால் எனக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லையா?

    இலங்கை ஜனாதிபதியிடம் நான் கையெடுத்து கும்பிட்டு கேட்கின்றேன். எனது கணவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அன்று எனக்கு ஆதரவினை வழங்கியிருந்தால் இன்று பாகிஸ்தானில் அந்த அண்ணாவுக்கு எதுவும் நடந்திருக்காதது. அன்று அதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தால் இலங்கையினை சேர்ந்த எவரையும் தொடுவதற்கு அச்சப்பட்டிருப்பார்கள்.

    எனது கணவனின் உடலை நான் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு எடுப்பதற்கு உலக நாடுகளில் உள்ள உறவுகளிடம் பிச்சையெடுத்தே அவரின் சடலத்தினைக்கொண்டு வந்தேன்.

    எனது மகன் மூன்று வயதாக இருக்கும்போது தொழிலுக்காக மலேசியாவுக்கு சென்றவர். பெட்டியில் சாமான்கள் அனுப்புகின்றேன் என்று கூறிவிட்டுச் சென்றவர் இறுதியாக கணவன் பெட்டியில் வந்திருக்கின்றார் என்று காட்டினார்கள்.

    வீட்டுக்கு கூட கொண்டு வர முடியாமல் கொழும்பில் இறுதிச்சடங்கினை செய்தோம். ஆனால் எனது கணவனின் உடலத்தில் இனவாதத்தினை காட்டாமல் அனைத்து மதத்தவர்களும் வருகை தந்து தொட்டு தூக்கி அடக்கம் செய்ய உதவினார்கள்.அதன் காரணமாக நான் இங்கு இனவாதத்தினை தூண்டவோ, அது தொடர்பில் கதைக்கவோ வரவில்லை.

    பாகிஸ்தானில் அவருக்கு நடைபெற்றது பாரிய அநீதி, அதேபோன்ற அநீதி எனக்கும் ஏற்பட்டது. அவரின் மனைவி எவ்வாறு இருக்கின்றாரோ அதேபோன்று நானும் 28 வயதில் கணவனை இழந்து பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றேன்.

    பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் மன்னிப்புக்கூட கேட்டுள்ளது. ஆனால் எனக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை. எனது கணவனை கொலை செய்தவர்கள் யார் என்பது கூட தெரியாத நிலையுள்ளது.

    எனது கணவனின் படுகொலைக்கு எனக்கு நீதி வேண்டும். எனக்கு வழங்கப்படும் நீதியானது இலங்கையின் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதியைப்பெற்றக்கொடுக்கும்.

    நான் ஒரு ஏழையென்ற நிலையில் இலங்கை அரசாங்கம் கவனிக்காத காரணத்தினால் தான் இன்று ஒரு அண்ணா பாகிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றார். அன்று இதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கையரை தொட்டால் இலங்கையே துடிக்கும் என்ற அச்சம் ஏனைய நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.


    எனது கணவர் உல்லாசத்திற்காக வெளிநாடு செல்லவில்லை. வீட்டில் இருந்த கஷ்டம், கடனை அடைப்பதற்காகவே சென்றார். இன்று கூட அந்த கடனிலிருந்து மீளமுடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனது கணவனின் கொலை தொடர்பில் மலேசியா அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனக்கு எந்த அறிவிப்பினையும் தரவில்லை.

    இலங்கை ஜனாதிபதிக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. நான் ஏழையென்ற காரணத்தினாலேயே யாரும் குரல்கொடுக்கவும் ஆதரவு வழங்கவும் முன்வரவில்லை. பணம் படைத்தவர்களுக்கு பிரச்சினையென்றால் பலர் குரல் கொடுக்கின்றனர்.நீதிகோருகின்றனர்.

    என்னுடைய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இவ்வாறே அமைதி காத்தால் எந்த நாட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.எமது பிரச்சினைக்காக அன்று இந்த ஊடகங்கள் குரல் கொடுத்திருந்தால் பாகிஸ்தானில் இன்று அந்த சம்பவம் நடந்திருக்காது.

    எனது கணவனின் உடல் இங்கும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. மூளை உட்பட பல உடற்பாகங்கள் இல்லாத நிலையேயிருந்தது. இங்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவேயிருந்தது.

    எனவே எனது கணவனின் கொலைக்கு இலங்கை அரசாங்கம் எனக்கு நீதியைப்பெற்றத்தர வேண்டும் - எனவும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad