அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் - பின்னணி என்ன???
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 6 படகுகளிலும் மொத்தமாக 43 மீனவர்கள் இருந்துள்ளனர்.
இதேவேளை தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுகிழமை (19) காலையில் கைது செய்யப்பட்டனர்.
இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இழுவை படகுகளில் வருகை தந்த மொத்தம் 12 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவேளை கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன தூதுவர் வடக்கிற்கு விஜயம் செய்துவிட்டு சென்ற மறுநாளே இக் கைது நடவடிக்கைகள் அதிரடியாக இடம்பெற்றுள்ளன.
இந்த இரு சம்பவங்களும் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி இந்திய அரசியலிலும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கிற்கு விஜயம் செய்த சீன தூதுவர் தலைமன்னாருக்கு சென்று, "இந்தியாவிற்கு இந்த இடத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர்கள் தூரம்" என வினவிய படி சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் நின்றுள்ளார்.
முன்பு ஒருபோதும் இல்லாதவாறு இடம்பெற்ற இந்த அதிரடி கைது நடவடிக்கையானது இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு மீனவர்களை மகிழ்வித்து, அவர்களை சீனாதான் எமக்கு பாதுகாப்பு என்று எண்ண வைத்து தமது பக்கம் திசை திருப்பி, வடக்கு மீனவர்களின் ஆதரவுடன் நிலங்களை கைப்பற்ற சீனா முயல்கின்றதா? என்ற கேள்வி பலரது மனங்களில் எழுகின்றது.
சீனா இந்தியாவுடன் மோதுவதற்கான ஒரு மையமாக இலங்கையை பார்க்கின்றதா? அல்லது இலங்கையின் முக்கிய இடங்களை தனது ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இலங்கையின் வடக்கில் சீனா காலூன்றுமானால் அது இந்தியாவிற்கு பெரியதொரு தலையிடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
சீனா வைத்த செக்கிற்கு இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி என்ன என காலம் பதில் சொல்லும்வரை அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தொகுப்பு :- யாழவன்
கருத்துகள் இல்லை