• Breaking News

    இந்திய இழுவைப்படகிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு...!

     


    இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே  சம்மேளனத்தினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா,

    நாம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். 

    அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது.

    எங்களுடைய பகுதிக்கு வந்து தொழில் செய்யும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் போது, எங்களுக்கெதிராகவும் கடற்படையினருக்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துக்கள் சில தமிழக மீனவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

    இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை என தமிழ்நாட்டு மீனவர்கள் கூறுகின்றார்கள்.

    எம்மைப் பொறுத்தவரை மீனவர் சமூகமாகிய நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. நாங்கள் ஏமாற்றப்படுகின்ற சமூகமாகவே காணப்படுகின்றோம்.

    நாளைய தினம் யாழ். மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

    இந்தியாவில் எம்மை அவமதித்தும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    அந்த பொய்யான முகத்தை இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் நாளை காலை 9 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரை யாழ் மாவட்ட செயலகம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

    எங்கள் முற்றத்தில் வந்து தொழில் செய்து விட்டு இலங்கை அரசாங்கம் அதனை தடுக்கின்றது என கூறுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த போராட்டத்தில் அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள், அரசியல்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

    இந்த போராட்டத்தில் நாம் எந்த மகஜரையும் கையளிக்கப் போவதில்லை. இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதோ எனக் கூறி எங்கள் போராட்டத்தையும் எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம் - என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad