மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்று தோட்டத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (25) காலை கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து தர்மராஜ் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் அங்கு சென்று அந்த நபர் தங்கியிருந்த வீட்டைத் திறந்து பார்த்த போது அவர் அறையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பாதிக்கப்பட்டவரின் தலைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் இரத்தம் கசிந்திருந்தது தெரியவந்துள்ளதுடன், குறித்த நபர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டுக்குச் சென்றதாக உயிரிழந்தவரின் மனைவி விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சடலம் நுவரெலியா நீதவானின் விசாரணைக்காகச் சம்பவம் இடம்பெற்றுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின் சடலம் சட்ட வைத்தியர் ஊடான பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை