• Breaking News

    யாழ். லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்...!

     


    யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 

    இன்று காலை 9 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.


    இந்த போராட்டத்தின் போது, எமது உயிருக்கு யார் உத்தரவாதம், நாம் ஆரோக்கியமான சந்ததியாய் வாழ வழிவிடு, தரமற்ற எரிவாயுக் கசிவால் ஏற்படும் ஆபத்துக்கு யார் பொறுப்பு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

    ஜே/81 கிராம சேவகர் பிரிவை சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக குறித்த களஞ்சியசாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலைக்கு முன்பாக கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பாக அருகில் உள்ள பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    அத்துடன் உடனடியாக அங்கிருந்து குறித்த களஞ்சியசாலையை அகற்றுமாறு, யாழ்ப்பாண பிரதேச செயலர், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.


    அதேவேளை அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபை , எரிவாயு களஞ்சியத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும், ஆதனத்திற்குள் வாகனங்கள் தரித்து நிற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அத்துடன் கட்டடத்திற்கான அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த களஞ்சியசாலை உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் , குறித்த களஞ்சியசாலை உரிமையாளர், கடந்த ஓகஸ்ட் மாதமளவில், அயலிலுள்ள மக்களுக்கு இடையூறு செய்வதை கருத்தில் கொண்டு, மனிதாபிமான ரீதியிலும் இங்கு நடைபெறுகின்ற 50 வீதமான வாகன செயற்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாகவும், கொவிட்- 19 நிலமை காரணமாக 4 – 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையிலேயே அப்பகுதி மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad