கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி - சிறுவன் படுகாயம்...!
கிளிநொச்சி - பரந்தன், உமையாள்புரம் சோலைநகர் பகுதியில் எறிகணை குண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . இதில் 25 வயதுடைய சிவலிங்கம் யுவராஜ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டுகளை சட்டவிரோத முறையில் சேகரித்து, அவற்றை பழைய இரும்பு சேகரிப்பதற்காக, 81 வகையைச் சேர்ந்த எறிகணை குண்டுகளை மின்சார இயந்திரத்தினால் வெட்ட முற்பட்ட வேளையில் எறிகணை குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள நபரின் சகோதரன் 13 வயதுடைய சிவலிங்கம் நிலக்ஸன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சூழவுள்ள சில பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை