தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் பலவந்தமாக மறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் - வலி. மேற்கு பிரதேச சபையில் சம்பவம்...!
வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம் அவர்களது தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது, விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான கோரிக்கையை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பொன்ராசா முன்வைத்தார்.
இந்த கோரிக்கை சபையில் முன்மொழிந்து வழிமொழிந்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஈ.பி.டி.பி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் சபையை விட்டு வெளியேறி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகினர்.
இதன்போது சபையை விட்டு வெளியேறாத ஏனைய உறுப்பினர்கள் உப தவிசாளரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல விடாமல் வற்புறுத்தி பலவந்தமாக மறித்து "போனவர்கள் போகட்டும் நீங்கள் சபையை நடத்துங்கள்" எனக்கூறினர். இதனால் செய்வதறியாது திணறிய அவர் சபையினை 14 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டு, உப தவிசாளரும் சபையில் இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சபையை ஆரம்பிக்குமாறு உறுப்பினர்கள் கூறினர். ஆனால் தவிசாளரோ சபையை 14 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் உறுப்பினர்கள் கொந்தளித்து "பெரும்பான்மையாக இருக்கும் எங்களை கேட்காமல், 5 உறுப்பினர்களின் பேச்சைக்கேட்டு எப்படி சபையை ஒத்திவைப்பீர்கள்? நாங்கள் என்ன வீட்டிற்கா சென்றோம், ஆர்ப்பாட்டத்திற்கு தானே சென்றோம். இன்று 6 மணியாகினாலும் சபையை நடாத்தவேண்டும்" எனக்கூறி ஒரு மணத்தியாலத்திற்கும் அதிகமான நேரம் அவருடன் முரண்பட்டனர்.
பின்னர் அனைத்து உறுப்பினர்களும் ஒருவாறு சமாதானமாகி சபையிலிருந்து வெளியேறினர்.
கருத்துகள் இல்லை